Popular Post

Showing posts with label Hadees. Show all posts

ஹதீஸ் கலை - [ Reference - www.tamililquran.com]

By : Unknown


நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சொற்கள், செயல்கள், அங்கீகாரங்கள் ஆகிய மூன்றையும் ஹதீஸ்கள் என்பார்கள். ஹதீஸ்களை அறிவிக்கக்கூடிய அறிவிப்பாளர்களின் தகுதி, எண்ணிக்கை, அறிவிப்பாளர்களிடையே தொடர்பு போன்ற தன்மைகளின் அடிப்படையில் ஹதீஸ்களை அறிஞர் பெருமக்கள் தரம் பிரித்துள்ளனர். அந்த வகைகளை அறிந்து வைத்துக் கொண்டாலே ஹதீஸ்கலையில் பெருமளவு அறிந்து கொண்டதாகக் கொள்ளலாம்.

எந்த வகையான ஹதீஸ்களை ஏற்கலாம்? எவற்றை ஏற்கக் கூடாது என்ற அடிப்படையில் ஹதீஸ்களை நான்கு முக்கிய தலைப்புகளில் அடக்கலாம்.

1. ஸஹீஹ் ( ஆதாரப்பூர்வமானவை)

2. மவ்ளூவு (இட்டுக்கட்டப்பட்டது) 

3. மத்ரூக் (விடப்படுவதற்கு ஏற்றது) 

4. ளயீப் (பலவீனமானது) 

எந்த ஹதீஸாக இருந்தாலும் இந்த நான்கு வகைக்குள் அடங்கிவிடும். ஸஹீஹ் என்ற தரத்தில் உள்ளதை மட்டுமே நாம் நடைமுறைப்படுத்த வேண்டும். மற்ற மூன்று வகைகளில் அமைந்த ஹதீஸ்களை நடைமுறைப் படுத்தக்கூடாது.

நான்கு வகைகளையும் விரிவாக நாம் அறிந்து கொள்வோம். 
1. ஸஹீஹ் (ஆதாரப்பூர்வமானவை) 
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பற்றி ஒரு செய்தியை அறிவிக்கும்போது இன்று நாம் அறிவிப்பாளர்களின் வரிசையுடன் கூறுவதில்லை. நூல்வடிவில் தொகுத்து பாதுகாக்கப்பட்டுள்ளதால் அது தேவையுமில்லை. ஆனால் நூல் வடிவில் தொகுக்கும் பணி நடந்து கொண்டிருந்த இரண்டாவது, மூன்றாவது நூற்றாண்டுகளில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொடர்பான ஒரு செய்தியைக் கூறுவதென்றால் தனக்குத் கூறியவர் யார்? என்பதையும் சேர்த்துக் கூறினால் தான் ஹதீஸ்கலை அறிஞர்கள் அதைத் தமது நூற்களில் பதிவு செய்வார்கள்.

தமக்கு அறிவித்தவர் யார்? என்பதை மட்டும் கூறினால் போதாது. மாறாக தமக்கு அறிவித்தவர் யாரிடம் கேட்டார்? அவர் யாரிடம் இச்செய்தியைக் கேட்டார்? என்று சங்கிலித் தொடராகக் கூறிக் கொண்டே நபிகள் நாயகம் வரை செல்ல வேண்டும். அப்படி இருந்தால் தான் அதை ஹதீஸ் என்று ஒப்புக்கொள்வார்கள். எல்லா ஹதீஸ் நூற்களும் இந்த வகைளில் தான் தொகுக்கப்பட்டுள்ளன.

தமிழாக்க ஹதீஸ்களில் சங்கிலித் தொடரான அறிவிப்பாளர்களைக் குறிப்பிடவில்லை. மாறாக நபிகள் நாயகத்துடன் நேரடியாகத் தொடர்பு கொண்டிருந்த நபித்தோழரை மட்டுமே அறிவிப்பாளர் எனக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அரபு மூலத்தில் ஒவ்வொரு ஹதீஸும் சங்கிலித் தொடரான அறிவிப்பாளர் பட்டியலுடன் தான் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உதாரணமாக திர்மிதீயில் இடம் பெற்ற முதல் ஹதீஸை எடுத்துக் கொள்வோம்.

“தூய்மையின்றி எந்தத் தொழுகையும், மோசடிப் பொருட்களிலிருந்து எந்தத் தர்மமும் இறைவனால் ஏற்கப்படாது” என்பது முதலாவது ஹதீஸ்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதைக் கூறியதாக அறிவிக்கும் முதல் அறிவிப்பாளர் இப்னு உமர் (ரலி) என்ற நபித்தோழர். இவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நேரடியாகக் கேட்டு அறிவிக்கிறார்.

இந்த செய்தியை இப்னு உமர் (ரலி) யாரிடத்தில் கூறினார்? அவரிடம் நேரடியாகக் கேட்டவர் யார்? முஸ்அப் பின் ஸஃது என்பார் தான் இதைக் கேட்டவர்.

அவரிடமிருந்து கேட்டவர் ஸிமாக் என்பார்.

ஸிமாக் என்பாரிடமிருந்து நேரடியாகக் கேட்டவர்கள் இருவர். அவர்கள் 1. இஸ்ராயீல், 2. அபூ அவானா ஆகியோர் ஆவர். இவர்களிடமிருந்து இமாம் திர்மிதீ எப்படி அறிந்தார் என்பதை கீழ்கண்ட வரைபடம் மூலம் விளங்கலாம்.

மேற்கண்ட இருவழிகளில் இந்த ஹதீஸ் திர்மிதீ இமாமுக்கு கிடைத்துள்ளது.
இவ்வளவு விபரங்களையும் முதல் ஹதீஸில் கூறுகிறார். இப்படி ஒவ்வொரு ஹதீஸுக்கும் அறிவிப்பாளர்களின் சங்கிலித் தொடரை அவர் கூறுகிறார். இந்த செய்தி இமாம் திர்மிதீக்கு எவர்கள் வழியாகக் கிடைத்ததோ அவர்கள் அனைவரும் நம்பகமானவர்களாக இருக்க வேண்டும்.
அவர்கள் அனைவரும் உறுதியான நினைவாற்றல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
அவர்கள் ஒவ்வொருவரும் தாம் யார் வழியாக அறிவிக்கிறாரோ அவர்களிடமிருந்து நேரடியாகக் கேட்டிருக்க வேண்டும்.
இந்த தன்மைகள் ஒருங்கே அமையப் பெற்றிருந்தால் தான் அதை ஆதாரப்பூர்வமான -ஸஹீஹான - ஹதீஸ்கள் என்பர். அத்துடன் ஹதீஸின் கருத்து திருக்குர்ஆனுடன் நேரடியாக மோதும் வகையில் இருக்கக் கூடாது.

ஸஹீஹான - ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் என்றால் அதன்படி அமல் செய்வது அவசியம் என்பதில் அறிஞர்களுக்கிடையே எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை.

2. மவ்ளூவு (இட்டுக்கட்டப்பட்டது) 

ஏற்கப்படாத ஹதீஸ்களின் வரிசையில் முதலிடத்தில் இருப்பது “மவ்ளூவு” வகை ஹதீஸ்களாகும். “மவ்ளூவு” என்றால் இட்டுக்கட்டப்பட்டது என்பது பொருள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறாத - செய்யாத - அங்கீகரிக்காதவற்றை அவர்கள் பெயரால் கூறுவது இட்டுக்கட்டப்பட்டது எனப்படும்.
  • திருக்குர்ஆனுக்கும், நிருபிக்கப்பட்ட ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுக்கும் நேர்முரணாகவும் - எந்த வகையிலும் விளக்கம் கொடுக்க முடியாதவைகளாக அமைந்தவை.
  • புத்தியில்லாதவன் உளறலுக்கு நிகராக அமைந்தவை.
  • அறிவிப்பாளர்களில் ஒருவரோ பலரோ பெரும் பொய்யர் என்று நிரூபிக்கப்பட்டிருப்பது.
  • இட்டுக்கட்டியவர்கள் பிற்காலத்தில் திருந்த தாம் இட்டுக்கட்டியதை ஒப்புக் கொள்ளுதல் அல்லது வசமாக மாட்டிக் கொள்ளும் போது ஒப்புக் கொள்ளுதல்
  • இந்த அம்சங்களில் ஒன்று இருந்தால் கூட அது இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும். அதை ஏற்கக் கூடாது. அதனடிப்படையில் அமல் செய்யக் கூடாது. இதில் அறிஞர்களுக்கிடையே எந்த விதமான கருத்து வேறுபாடும் இல்லை.

    இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களைப் பற்றி இந்த விபரம் போதுமென்றாலும் இதில் அதிக விழிப்புணர்வு நமக்கு அவசியம் தேவை என்பதால் இது குறித்து இன்னும் சில விபரங்களையும் அறிந்து கொள்வோம். முதலில் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் ஏன்? எப்படி? இந்தச் சமுதாயத்தில் நுழைந்தன? என்பதை அறிந்து கொள்வோம். 

    3. மத்ரூக் (விடப்படுவதற்கு ஏற்றது) 
    மவ்ளூவு எனும் இட்டுக்கட்டப்பட்ட ஹதிஸ்களுக்கு அடுத்த நிலையில் அமைந்தவை மத்ருக் எனும் ஹதீஸ்களாகும்.

    அறிவிப்பாளர்களில் பொய்யர் என்று சந்தேகிக்கப்பட்டவர் இடம் பெறுவது மத்ரூக் எனப்படும். ஹதீஸ்களில் அவர் பொய் கூறினார் என்பது நிருபிக்கபடாவிட்டாலும் பொதுவாக அவர் பொய் பேசக் கூடியவர் என்று நிரூபிக்கப்பட்டிருந்தால் அவர் அறிவிக்கும் ஹதீஸ்களும் மத்ரூக் எனப்படும்.

    இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களுக்கும் மத்ரூக் எனும் ஹதீஸ்களுக்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால் மவ்ளூவு என்றால் அறிவிப்பாளர் பொய்யர் என்பது சந்தேகமற நிரூபிக்கப்பட்டிருக்கும். மத்ருக் என்பதில் பொய்யர் என்பது திட்டவட்டமாக நிரூப்பிக்கப்பட்டிருக்காது. எனினும் பரவலாக அவர் மேல் பொய்யர் என்ற சந்தேகம் தெரிவிக்கப்பட்டிருக்கும். இரண்டுமே அடியோடு நிராகரிக்கப்படும் என்பதில் எந்த அறிஞரும் மாற்றுக்கருத்து கொள்ளவில்லை. 

    4. ளயீப் (பலவீனமானது) 
    நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்களா இல்லையா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தக் கூடியவை ளயீப் எனப்படும். அந்தச் சந்தேகம் பல காரணங்களால் ஏற்படலாம். சந்தேகத்திற்குரியவற்றை நாம் பின்பற்றக் கூடாது.

    சந்தேகம் ஏற்பட்டால் ஏன் பின்பற்றக் கூடாது?

    உனக்கு திட்டவட்டமான அறிவு இல்லாததை பின்பற்றாதே (அல்குர்ஆன் 17:36) என்று அல்லாஹ் கூறுகிறான். உனக்கு சந்தேகமானதை விட்டு விட்டு சந்தேகமற்றதின் பால் சென்றுவிடு என்பது நபிமொழி அறிவிப்பவர் : ஹஸன் (ரலி) நூல் : திர்மிதீ, அஹ்மத். ஹாகிம்.

    நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்களா என்ற சந்தேகம் வந்தால் அதை பின்பற்றுவது தடை செய்யப்பட்டுள்ளதை மேற்கண்ட ஆதாரங்கள் கூறுகின்றன. 

    Tag : ,

    ஜிப்ரீல்(அலை) அவர்களின் கேள்வி....?

    By : Unknown


    நபி(ஸல்) அவர்கள் ஒரு நாள் மக்களுக்கிடையில் இருந்தபோது ஒருவர் அவர்களிடம் வந்து 'ஈமான் என்றால் என்ன?' என்று கேட்டதற்கு 'ஈமான் என்பது அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய சந்திப்பையும் அவனுடைய தூதர்களையும் நீர் நம்புவது. மேலும், மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவதையும் நீர் நம்புவது. மேலும், மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவதையும் நீர் நம்புவது' எனக் கூறினார்கள். அடுத்து 'இஸ்லாம் என்றால் என்ன?' என்று கேட்டதற்குவர்கள் கூறினார்கள். 'இஸ்லாம் என்பது அல்லாஹ்வுக்கு (எதனையும்) நீர் இணையாகக் கருதாத நிலையில் அவனை நீர் வணங்குவதும் தொழுகையை நிலை நிறுத்தி வருவதும் கடமையாக்கப்பட்ட ஸகாத்தை நீர் வழங்கி வருவதும் ரமலான் மாதம் நீர் நோன்பு நோற்பதுமாகும்" என்று கூறினார்கள். 
    அடுத்து 'இஹ்ஸான் என்றால் என்ன?' என்று அவர் கேட்டதற்குவர்கள் கூறினார்கள்: '(இஹ்ஸான் என்பது) அல்லாஹ்வை (நேரில்) காண்பதைப் போன்று நீர் வணங்குவதாகும். நீர் அவனைப் பார்க்காவிட்டாலும் நிச்சயமாக அவன் உம்மைப் பார்த்துக் கொண்டே இருக்கிறான் என்றார்கள்' அடுத்து 'மறுமை நாள் எப்போது?' என்று அம்மனிதர் கேட்டதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'அதைப் பற்றிக் கேட்கப்பட்டவர் (நான்) அதைப் பற்றிக் கேட்கிற உம்மை விட மிக்க அறிந்தவரல்லர். (வேண்டுமானார்) அதன் (சில) அடையாளங்களைப் பற்றி உமக்குச் சொல்கிறேன். அவை, ஓர் அடிமைப் பெண் தனக்கு எஜமானாகப் போகிறவனை ஈன்றெடுத்தல்; மேலும் கறுப்பு நிற ஒட்டகங்களை மேய்த்துக் கொண்டிருந்த மக்கள் உயர்ந்த கட்டிடங்கள் கட்டித் தமக்குள் பெருமையடித்துக் கொள்ளல். ஐந்து விஷயங்களை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறியமாட்டார்" என்று கூறிவிட்டு, பின்வரும் வசனத்தை ஓதிக் காட்டினார்கள். 'மறுமை நாளைப் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே உள்ளது." (திருக்குர்ஆன் 31:34) பின்னர் அம்மனிதர் திரும்பிச் சென்றார். 'அவரை அழைத்து வாருங்கள்" என்றார்கள். சென்று பார்த்தபோது அவரைக் காணவில்லை. அப்போது, 'இவர்தான் ஜிப்ரீல். மக்களுக்கு அவர்களின் மார்க்கத்தைக் கற்றுக் கொடுக்க வந்திருக்கிறார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ( புகாரி - 50 )
    Tag : ,

    ஹதீஸ் நூற்கள் ஓர் அறிமுகம்.

    By : Unknown



    ஹதீஸ் நூற்கள் பல வகைகளாக திரட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு வகைளான தொகுப்புகளுக்கும் தனித்தனியான பெயர்கள் உள்ளன. 

    ஸுனன் 
    தொழுகை, நோன்பு போன்ற பாடத் தலைப்புகளின் கீழ் பலரும் அறிவிக்கும் ஹதீஸ்களை சில நல்லறிஞர்கள் திரட்டியுள்ளனர். இவ்வாறு அமைந்த நூற்கள் ஸுனன் எனப்படும். 

    புகாரி, முஸ்லிம், அபூதாவூத். திர்மிதீ, நஸயீ, இப்னு மாஜா, தாரமீ, அல்முன்தகா, இப்னு குஸைமா, இப்னுஹிப்பான், ஸுனன் ஸயீத் பின் மன்சூர், பைஹகீ போன்ற தொகுப்புகளை இதற்கு உதாரணமாகக் கூறலாம். 

    ஸஹிஹ் 
    புகாரி, முஸ்லிம் ஆகிய நூற்களில் ஆதாரப்பூர்வமானவை மட்டுமே தொகுக்கப்படுவதை தொகுத்தவர்கள் கொள்கையாகக் கொண்டிருந்ததால் அதை ஸுனன் என்று குறிப்பிடும் வழக்கம் இல்லை. ஸஹீஹ் என்றே குறிப்பிடுகின்றனர். இது போல் இப்னு ஹிப்பான் ஆகிய நூற்களும் இவ்வாறே ஸஹீஹ் என்று குறிப்பிடப்படுகின்றன. 

    முஸ்னத் 
    அபூபக்ர் அறிவித்த ஹதீஸ்கள், உமர் அறிவித்த ஹதீஸ்கள் என்று ஒவ்வொரு நபித்தோழரும் அறிவித்த ஹதீஸ்களை ஒரு இடத்தில் திரட்டி ஹதீஸ்களைத் தொகுத்தவர்களும் இருந்தனர். இவ்வாறு தொகுக்கப்பட்ட நூற்கள் முஸ்னத் எனப்படும்.

    முஸ்னத் எனப்படும் நூலில் ஒரு குறிப்பிட்ட பாடத்தில் உள்ள ஹதீஸைத் தேடிக் கண்டுபிடிக்க முடியாது. முஸ்னத் அஹ்மத், முஸ்னத் அபீ அவானா, முஸ்னத் தயாலிஸீ, முஸ்னத் ஷாஃபீ, முஸ்னத் அபீஹனீபா, முஸ்னத் ரபீவு, முஸ்னத் இஸ்ஹாக், முஸ்னத் பஸ்ஸார், முஸ்னத் ஹுமைதி, முஸ்னத் ஷிஹாப், முஸ்னத் அப்து பின், முஸ்னத்இப்னுல் ஜஃது, முஸ்னத் ஹாரிஸ் போன்ற நூற்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம். 

    முஃஜம் 
    ஒருவர் பத்து ஆசிரியர்களிடம் ஹதிஸ்களைக் கேட்டிருப்பார். எந்தெந்த ஆசிரியர்களிடம் கேட்டாரோ அதையே தலைப்பாக்கியும் நூற்கள் தொகுக்கப்பட்டன. அவை முஃஜம் எனப்படும். இப்ராஹீம் என்ற ஆசிரியர் எனக்கு அறிவித்தவை - 

    உஸ்மான் என்ற ஆசிரியர் அறிவித்தவை என்பது போல இது வகைப்படுத்தப்பட்டிருக்கும். இத்தகைய நூற்களில் ஒரு ஹதீஸைத் தேடிக் கண்டுபிடிப்பது மிகவும் சிரமமான ஒன்றாகும். 
    தப்ரானியின் சகீர், தப்ரானியின் அவ்ஸத், தப்ரானியின் கபீர் ஆகிய நூற்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம். 

    ஜாமிவு 
    மார்க்கச் சட்டதிட்டம், கொள்ளை விளக்கம், வரலாறு போன்ற திருக்குர்ஆன் விளக்கவுரை உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் கொண்டதாக தொகுக்கப்பட்டு பாடத்தலைப்புகளில் அமைக்கப்பட்டவை ஜாமிவு எனப்படும். ஸுனன் என்ற வகையிலான நூற்களில் தொழுகை, நோன்பு போன்ற சட்டதிட்டங்கள் மட்டும் இடம் பெற்றிருக்கும். ஜாமிவு என்ற வகையில் அதைவிட கூடுதலான பல விபரங்கள் இடம் பெற்றிருக்கும். 

    முஸன்னப் 
    நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ்களுடன் நபித்தோழர்கள், தாபியீன்கள், தபவுத்தாபியீன்கள் ஆகியோரின் சொல், செயல்களையும் சேர்த்து தொகுக்கப்பட்டவை முஸன்னப் எனக் கூறப்படுகிறது. 
    முஸன்னப் அப்துர் ரஸ்ஸாக், முஸன்னப் இப்னு அபீஷைபா போன்ற நூற்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம். 

    முஸ்தத்ரக் 
    குறிப்பிட்ட விதிகளின் அடிப்படையில் ஒருவர் தொகுத்த நூலில் எல்லா ஹதீஸ்களும் இடம் பெற்றிருக்க முடியாது. அந்த விதிகளின் கீழ் அமைந்த எத்தனையோ ஹதீஸ்கள் விடப்பட்டும் போய்விடும். இவற்றை இன்னொருவர் தொகுத்தால் அது முஸ்தத்ரக் எனப்படும். 

    உதாரணமாக புகாரியும் முஸ்லிமும் சரியான ஹதீஸ்கள் எவை என்பதற்கு சில நிபந்தனைகள் வகுத்துள்ளனர். அந்த நிபந்தனைகளின் படி அமைந்த பல ஹதீஸ்களை அவர்கள் விட்டுள்ளதால் அவற்றை ஹாகிம் தொகுத்தார். புகாரி, முஸ்லிம் ஆகியோரின் நிபந்தனைப்படி சரியான ஹதீஸ்களாக இருக்கத் தகுதியானவை என்று பல ஹதீஸ்களைத் தொகுத்துள்ளார். இப்படி தொகுக்கப்பட்டவை முஸ்தத்ரக் எனப்படும்.

    (ஆனால் ஹாகிம் இந்தப் பணியை நிறைவாகச் செய்யவில்லை பலவீனமான பல ஹதீஸ்களைப் பதிவு செய்துவிட்டு இது புகாரி, முஸ்லிம் ஆகியோரின் நிபந்தனைகளின் படி ஸஹீஹ் எனும் தரத்திலமைந்துள்ளது எனக் கூறுவார். ஆனால் உண்மையில் இது இட்டுக்கட்டப்பட்டதாக இருக்கும் என்பது தனி விஷயம்). 

    மவ்ளூஆத் 
    நல்லறிஞர்கள் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களையெல்லாம் அம்பலப்படுத்தும் வகையில் தனி நூற்களையே எழுதியுள்ளனர். அவை மவ்ளூஆத் எனப்படும். 
    இப்னுல் ஜவ்ஸீ, முல்லா அலி காரி, சுயுத்தி போன்ற அறிஞர்களின் நூற்கள் மிகவும் பிரசித்தி பெற்றவைகளாகும். 

    தங்களின் முழு வாழ்நாளையும் இந்த ஆய்வுக்காக அர்ப்பணித்து இட்டுக்கட்டப்பட்டவைகளை இந்த நல்லறிஞர்கள் இனம் காட்டிச் சென்றார்கள். பொய்களை களையெடுக்கும் முயற்சியில் இவர்கள் இறங்கியிருக்காவிட்டால் இஸ்லாத்துக்கும் ஏனைய மார்க்கங்களுக்கும் வித்தியாசம் இல்லாத நிலை ஏற்பட்டிருக்கும். 

    ஹதீஸ் நூற்கள் தொகுக்கப்படும் முறையை அடிப்படையாகக் கொண்டு இவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன.
    Tag : ,

    - Copyright © Dawah Times - - Powered by Ahamed saj - Designed by AHAMED SAJ -