- Back to Home »
- Tafsir »
- வெற்றிக்கு என்ன வழி
Posted by : Unknown
Saturday, June 7, 2014
மனித சமூகத்தின் வெற்றிக்கான வழிகளை அல்லாஹ்வும் அவன் தூதரும் அழகாக காட்டித் தந்துள்ளார்கள், அவாறான வழிகளை பின்வரும் ஆதாரங்களைக் கொண்டு விளக்கினால் அவை இரண்டுதான் என்பது தெளிவாகும். அவை அல்லாஹ்வின் கட்டளை அல்குர்ஆனும், நபிகளாரின் வழிகாட்டல் சுன்னவுமேயாகும்.
அல்குர்ஆனின் கூற்றுக்கள்:-
யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் – இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள். (4:69)
மேலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை; ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள். (33:36)
நபி (ஸல்) அவர்களின் கூற்றுக்கள்:-
அபூ ஹுரைரா(றழி) மற்றும் ஸைத் இப்னு காலித்(றழி) ஆகியோர் அறிவிக்கின்றார்கள் : (ஒரு முறை) நபி(ஸல்) அவர்களிடம் நாங்கள் இருந்தோம். அப்போது (வழக்கைக் கொண்டு வந்த இருவரிடம்) ‘உங்கள் இருவருக்குமிடையே நான் அல்லாஹ்வின் சட்டப்படியே தீர்ப்பளிப்பேன்’ என்று நபியவர்கள் சொன்னார்கள். (புஹாரி: 7278)
அபூ ஹுரைரா(றழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:(ஒரு முறை) இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘என் சமுதாயத்தார் அனைவரும் சொர்க்கம் செல்வார்கள்; ஏற்க மறுத்தவரைத் தவிர’ என்று கூறினார்கள். மக்கள், ‘இறைத்தூதர் அவர்களே! ஏற்க மறுத்தவர் யார்?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘எனக்குக் கீழ்ப்படிந்தவர் சொர்க்கம் புகுவார்; எனக்கு மாறு செய்தவர் (சத்தியத்தை) ஏற்க மறுத்தவராவார்’ என்று பதிலளித்தார்கள். (புஹாரி: 7280)
இந்த குர்ஆன் வசனங்கள் ஹதீஸ்கள் நபித் தோழர்களின் கூற்றுகள் அனைத்தும் அல்லாஹ்வின் வேதமும் நபிகளாரின் சுன்னாவுமே பின்பற்றத் தகுதியானவை என்பதை தெளிவுபடுத்துகின்றன.
மேலும் குறிப்பாக ஒரு விடையத்தில் கருத்து முரண்பாடு ஏற்பட்டுவிட்டால் அப்போது ஒரு முஃமின் எப்படி நடக்க வேண்டும் என்பதை தெளிவு படுத்தும் சான்றுகள் பின்வருமாறு:
நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள்; உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் – மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் – அதை அல்லாஹ்விடமும், (அவன்) தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள் – இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும். (4:59)
உம் இறைவன் மேல் சத்தியமாக, அவர்கள் தங்களிடையே எழுந்த சச்சரவுகளில் உம்மை நீதிபதியாக ஏற்றுப் பின்னர் நீர் தீர்ப்பு செய்தது பற்றி எத்தகைய அதிருப்தியையும் தம் மனங்களில் கொள்ளாது (அத்தீர்ப்பை) முற்றிலும் ஏற்றுக் கொள்ளாத வரையில், அவர்கள் நம்பிக்கை கொண்டவர்கள் ஆகமாட்டார்கள். (4:65)
இவ்வசனங்கள் கருத்து வேறுபாடின் போது ஒரு முஃமின் எதன்மூலம் தீர்வு தேடவேண்டும் என்பதை தெளிவுபடுத்துகின்றது, அத்தோடு அவ்விரண்டுக்கும் அப்பால் மத்ஹப்களிலோ தரீக்கக்களிலோ ஊர் வழமைகளிலோ குடும்ப அங்கீகாரங்களிலோ தீர்வு தேடுவது வழிகேடாகும் என்பதனையும் தெளிவுபடுத்துகின்றது.